Friday, June 23, 2023

Seetha Piraatti's Vanavaasam

 

சீதாப்பிராட்டி சிறையில் இருந்த ஏற்றம் பற்றி முதலியாண்டான் ஸ்வாமி அருளிச்செய்த பத்து வார்த்தைகள்.

1. பிராட்டிக்குச் சிறையிருப்பு போலே ஶ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸம்ஸாரத்திலிருப்பு.

2. பிராட்டி இளயபெருமாள் விஷயத்தில் அபசாரப்பட்டு உடனே பெருமாளைப்பிரிய நேர்ந்தது போல, சேதநர்களுக்கு பாகவதாபசாரம்,எம்பெருமான் திருவடி ஸம்பந்தத்தை விலகப் பண்ணும்

3. பிராட்டிக்கு அஶோக வனம் போலே இவர்களுக்கு ப்ரக்ருதி ஸம்பந்த ரூபமான தேஹம்.

4. பிராட்டிக்கு அரக்கிகளின் ஸஹவாஸம் போலே இவர்களுக்கு புத்ர களத்ராதிகளின் ஸஹவாஸம்.

5. பிராட்டிக்கு மாரீசமாயா ம்ருகக் காட்சி போலே இவர்களுக்கு "பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ" என்னும் படியான விஷயங்களின் காட்சி.

6. பிராட்டிக்குத் திருவடி நேர்ப்பட்டாப்போலே இவர்களுக்கு ஆசார்யன் நேர்படுவது.

7. பிராட்டிக்குத் திருவடி சொன்ன ஶ்ரீ ராமகுணங்கள் போலே இவர்களுக்கு ஆசார்யன் உபதேஶிக்கும் பகவத்விஷயாதிகள்.

8. பிராட்டிக்குத் திருவடி அடையாளங்கள் கூறித் திருவாழிமோதிரம் கொடுத்தது போலே இவர்களுக்கும் குருபரம்பரா பூர்வகமான திருமந்த்ர உபதேஶம்.

9. பிராட்டி திருவடிக்குச் சூடாமணி கொடுத்தாப்போலே இவர்கள் ஆசார்யன் விஷயத்தில் "தலையல்லால் கைம்மாறிலேனே" என்றிருக்குமிருப்பு.

10. பிராட்டிக்கு ஶ்ரீ விபீஷணாழ்வானது திருமகளாருடைய (த்ரிஜடா) ஸஹவாஸமும் பேச்சும் தாரகமாயிருந்தது போலே இவர்களுக்கு பாகவத ஸஹவாஸமும் அவர்களுடைய திவ்ய ஸூக்திகளுமே தாரகமாயிருக்கும்.